இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 8 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 8

கடந்த கட்டுரை வரை Blog, YouTube, Facebook மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். இந்த கட்டுரையில் அஃபிலியேட் மார்கெட்டிங் பற்றி பார்ப்போம். இதை செய்ய நாம் முன்பு பார்த்த மூன்று முறைகளுமே உதவும்.

அஃபிலியேட் மார்கெட்டிங் என்றால் என்ன?

இணையத்தில் வேறு நபர்களின் அல்லது நிறுவனத்தின் பொருளை நாம் விற்றுக் கொடுத்தால் அதன் மூலம் குறிப்பிட்ட பணத்தை நாம் கமிஷனாக பெறலாம். இதை செய்ய Blog, YouTube, Facebook என மூன்றையும் பயன்படுத்தலாம்.

எப்படி அஃபிலியேட் மார்கெட்டிங் செய்வது?

மேலே சொன்னது போல உங்கள் வலைத்தளம், YouTube சேனல், பேஸ்புக் பேஜ் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி பொருட்களை விற்கலாம். இதற்கு நீங்கள் விற்க விரும்பும் பொருள் எந்த தளத்தில் உள்ளதோ அதில் ஒரு அஃபிலியேட் அக்கவுண்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் எந்த பொருளை விற்க வேண்டுமோ அதன் லிங்க்கை மேல் குறிப்பிட்டுள்ள முறைகளில் பகிர்ந்து  விற்க முடியும்.

உதாரணமாக நீங்கள் ஒரு பென் ட்ரைவ், மவுஸ், லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்றவற்றை பற்றி எழுதி இருக்கும் போஸ்ட் அல்லது ஒரு வீடியோவில் Flipkart, Amazon போன்ற தளங்களின் பொருட்களின் அஃபிலியேட் லிங்க்கை பகிரலாம். இவ்வாறு நீங்கள் பகிரும் லிங்க் மூலம் ஒருவர் பொருளை வாங்கினால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் கிடைக்கும். எவ்வளவு கமிஷன் என்பதை நீங்கள் குறிப்பிட்ட தளத்திலேயே பார்க்கலாம்.
இணையத்தில் Flipkart, Amazon போன்ற பொருட்களை விற்கும் தளங்கள் மட்டுமின்றி 

மென்பொருட்கள், ஹோஸ்டிங், ஆடியோ/வீடியோக்கள், விளம்பர நிறுவனங்கள் என பலவும் அஃபிலியேட் முறையில் பொருட்களை விற்க அனுமதிக்கின்றன.  

அது மட்டுமின்றி நீங்கள் இந்தியா அல்லது நீங்கள் இருக்கும் நாட்டின் பொருளை மட்டுமே விற்க வேண்டும் என்றில்லை, எந்த நாட்டிற்கும் ஒரு பொருளை நீங்கள் விற்க முடியும். உதாரணமாக உங்கள் ஆடியன்ஸ் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அமேஷான் இந்திய தளத்திற்கு பதில் நீங்கள் அமெரிக்க தளத்தில் அஃபிலியேட் கணக்கை உருவாக்கி அந்த லிங்க்குகளை பகிர்ந்து விற்க முடியும். ஷாப்பிங் தளங்களை பொறுத்தவரையில் மட்டுமே நாடு என்ற விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கும். மற்ற தளங்கள், உதாரணமாக ஹோஸ்டிங் அல்லது மென்பொருட்களை விற்கும் தளத்தில் அஃபிலியேட் கணக்கு தொடங்கி அவற்றை விற்க விரும்பினால் எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யலாம்.
இந்த கட்டுரையில் Flipkart மூலம் எப்படி அஃபிலியேட் கணக்கு துவங்கி பொருட்களை விற்பது என்று பார்ப்போம்.

ஃப்ளிப்கார்ட் தளத்தில் அஃபிலியேட் முகவரி affiliate.flipkart.com. இதில் சென்று முதலில் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.உங்கள் கணக்கை உருவாக்கிய பின் வரும் பக்கம் இப்படி இருக்கும். இதில் Affiliate Link Generator என்று இருப்பதில் Flipkartஇல் இருக்கும் எந்த பொருளின் லிங்க்கையும் கொடுத்து அஃபிலியேட் லிங்க்கை பெறலாம்.  

அமேஷான் தளத்திலும், கிட்டதட்ட அனைத்து ஷாப்பிங் தளங்களிலும் இதே போல் தான் இருக்கும். இதே பக்கத்தில் நீங்கள் ஆர்டர் எண்ணிக்கை, குறிப்பிட்ட பொருளுக்கு எவ்வளவு கமிஷன், எவ்வளவு பணம் நீங்கள் சம்பாதித்து உள்ளீர்கள் போன்ற தகவல்களை பார்க்கலாம்.

எப்படி அஃபிலியேட் மார்க்கெட்டிங் வேலை செய்கிறது?

நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கும். எப்படி நம் லிங்க்கை பயன்படுத்தி தான் ஒருவர் குறிப்பிட்ட பொருளை வாங்குகிறார் என்று நிறுவனங்கள் தெரிந்து கொள்ளும்?. ரொம்பவே எளிது, அஃபிலியேட் கணக்கு உள்ள ஒவ்வொரு உள்ளவருக்கும் பொருளின் இணைப்பிற்கு ஒரு ஸ்பெஷல் லின்ங் அல்லது ஐடியை தருவார்கள்.  

நீங்கள் விற்கும் எல்லா பொருட்களுக்கும் இது கிட்டதட்ட உங்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர் உங்கள் தளம் அல்லது லிங்க் மூலம் தான் பொருளை வாங்கி இருக்கிறார் என்பதை Flipkart, Amazon போன்ற தளங்கள் அறிந்து கொள்ளும். அதன் பின் பொருளுக்குண்டான கமிஷன் உங்கள் கணக்கிற்கு வந்து விடும்.

அஃபிலியேட் மார்கெட்டிங் வசதியில் இன்னொரு சிறப்பு உங்கள் லிங்க் மூலம் ஒருவர் பொருளை வாங்க முடிவு செய்து குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பொருளை அன்று வாங்காமல் அடுத்த சில நாட்கள்/வாரங்கள் கழித்து வாங்கினாலும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இது 30/60/90 என்று தளத்திற்கு தளம் மாறுபடலாம் அல்லது அப்படி ஒரு வசதி இல்லாமலும் இருக்கலாம்.

சில கேள்வி & பதில்கள்:

யாரெல்லாம் அஃபிலியேட் கணக்கை உருவாக்கலாம்?

அஃபிலியேட் வாய்ப்பை வழங்கும் எந்த தளத்திலும், யார் வேண்டுமானாலும் அஃபிலியேட் கணக்கை உருவாக்கலாம். Blog, YouTube, Facebook மட்டுமின்றி ட்விட்டர் உட்பட பல வழிகளிலும் நீங்கள் விற்பனை செய்யலாம்.

ஒரு தளத்தில் அஃபிலியேட் கணக்கை உருவாக்குவது எப்படி?

பொருட்களை விற்கும் தளம்/நிறுவனத்தின் தளத்திலேயே அஃபிலியேட் கணக்கு உருவாக்குவதற்கான லிங்க் இருக்கும். அல்லது கூகுளில் தளம்/நிறுவனத்தின் பெயர் + affiliate program என்று தேடினால் கிடைக்கும்.

எந்த மாதிரியான பொருளை விற்கலாம்?

உங்கள் தளம்/பேஜ்/சேனலை பொறுத்து நீங்கள் அதற்கு தொடர்பான பொருளை விற்கலாம். இதனால் பொருட்களை அதிக நபர்கள் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சம்பந்தமே இல்லாத பொருளை பற்றி எழுதினால் விற்பனை இருக்குமா என்பது சந்தேகமே.

இதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

என்ன மாதிரியான பொருளை விற்கிறோம், எவ்வளவு விற்கிறோம் என்பதை பொறுத்து தான் உங்கள் வருமானம் இருக்கும். ஆனால் ஆடியன்ஸிடம் ஒரு நம்பிக்கையை நீங்கள் உருவாக்கி விட்டால் நிங்கள் சிபாரிசு செய்யும் பொருளை நிச்சயம் வாங்குவார்கள்.

எப்படி பணத்தை பெறுவது?

மற்றவற்றை போலவே இதிலும் Check, Bank Transfer, Paypal முறைகளில் பணத்தை பெறலாம். நீங்கள் அஃபிலியேட் கணக்கு உருவாக்க நினைக்கும் தளங்களில் இவைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம் இருக்கும்.

அஃபிலியேட் மார்கெட்டிங் குறித்து வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்னை prabuk@live.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

Post a Comment