விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் | கற்போம்

விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்


"எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ" என்று ரஜினிகாந்தே சொல்லியிருக்கிறார். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரும் தம் புதிய விண்டோஸுக்கு எட்டாம் நம்பரைக் கொடுத்து விட்டனர்.  நிச்சயம் ரஜினி ரசிகர்களாக இருப்பார்கள்.

*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி

தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி டாப்லெட், ஸ்மார்ட்போன் என்று ஆன இச்சமயத்தில் கனமான போட்டிகளுக்கு இடையில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய நிலையில் மைக்ரோசாஃப்ட் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.விண்டோஸ் 8 ஐ "டாப்லெட்டிலும் ஓடுவேன், டெஸ்க்டாப்பிலும் ஆடுவேன்"என்று சகலகலாவல்லவன் கமல் பாணியில் (அப்பாடா, ரெண்டு பேர் ரசிகர்களையும் கவர்ந்தாயிற்று) எல்லாவற்றிலும் நிறுவக் கூடிய ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் வசதிகள் என்ன, புது செருப்பு காலை கடிப்பது மாதிரி  கடிப்பவை என்னென்ன என்று பார்ப்பது இந்த மெகா தொடரின்,மன்னிக்கவும்,  இந்தப் பதிவுகளின் நோக்கம்.

நம் நண்பர் பிரபு கிருஷ்ணா ஏற்கனவே டெல் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கும் மின் புத்தகத்தின் இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறார். இருப்பினும் அழகுத் தமிழில் டெக்னாலஜி படித்தால் மிக இனிமையாகத் தான் இருக்கிறது. எனவே….


மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

  1. விண்டோஸ் 8 இல் ஸ்டார்ட் பட்டன் இருக்காது. என்னைக் காணவில்லையே எயிட்டோடு என்று பாடிவிட்டு ஒளித்து வைத்து விட்டனர். இது திகைப்பிலாழ்த்தினாலும் நாம் தான் ஒளிந்திருப்பதை கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாயிற்றே. அதை பிறிதொரு முறை தேடுவோம்.
மாறாக, அதன் ஸ்டார்ட் திரைக்கு அவ்வவ்போது வந்து போக வேண்டியிருக்கும். உ.ம், ஒரு புதிய யூஸர் அக்கவுண்ட்டைப் புதிதாகத் தொடக்கும் போது,  புகைப்படம், ஒரு பாட்டு இவற்றை இயக்க, பார்க்க இருக்கையில். இவற்றை டெஸ்க்டாப்பில் பார்க்க ஆரம்பித்தாலும் மறுபடி ஸ்டார்ட் திரைக்குக் கொண்டு வந்து விடும்.

  1. ஆப்பிள் ஐ-போடை விண்டோஸ் 8 கணினியில் இணைத்தால் "தம்பி யாருன்னே தெரியலையே" என்பது போல கண்டு கொள்ளாது.சமூகத்தின் உயரிய மட்டத்தில் வாழ்பவர்கள் என்பதன் அடையாளமான (ஸ்ஸ்ஸ், சோஷியல் ஸ்டேட்டஸ் சிம்பல் என்பதன் நீட்டி முழக்கம் அது) ஐ-போடை உபயோகிப்பவர்கள் ஒன்று ஆப்பிள் ஐ-டியூனை நிறுவிக் கொள்ள வேண்டும், அல்லது விண்டோஸ்(வேண்டுமென்றே) ஒரு பென் - டிரைவைப் போல பாவிக்கும் எக்ஸ்ப்ளோரரில் அதன் கோப்புகளை காப்பி செய்து கொள்ளலாம்.ஐ டியூன்ஸ் கொஞ்சம் எளிதான வழி இதற்கு.
  1. அடிக்கடி வொர்க்-ஸ்டேஷன் லாக் அவுட் ஆவது. இது ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும் போய் ஒரு காப்பியை கலந்து வைத்துக் கொண்டு வந்தால் படக்கென்று லாக் ஸ்க்ரீனைக் காண்பித்து மறுபடி கடவுச் சொல்லைக் கேட்கும். இதை கண்ட்ரோல் பேனலில் உள்ள கடவுச் சொல்லை அடிக்கடி கேட்டுத் தொல்லை பண்ணவும் என்பதை க்ளியர் பண்ணவும். எப்படி என்றால்...
- Right-click in any screen’s bottom-left corner and then choose Control Panel.
- From the Control Panel, click System and Security and then click Power Options.
- From the screen’s left edge, click Require a Password on Wakeup.
- When the window appears, most of the options are grayed out — inaccessible.
- Select the option labeled Change Settings That Are Currently Unavailable.
- Select the Don’t Require a Password option and then click the Save Changes button.

  1. எத்தனை கோடி விண்டோஸைத் திறந்தேன் இறைவா என்று வகைக்கொன்றாக பல விண்டோக்களைத் திறந்து வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைபாய்பவரா நீங்கள்? என்னென்ன விண்டோஸ் திறந்து ஆக்டிவாக இருக்கிறது என்பதை அறிய Altஎன்ற கீயையும் Tab ஐயும் அழுத்தவும். ஒரு சிறிய விண்டோவில் நீங்கள் திறந்திருக்கும் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டும். Tab ஐ அழுத்தி, விடுவித்துக் கொண்டு, உங்களுக்குத் தேவையான விண்டோ ஆக்டிவ் ஆக காட்டும் போது Tab ஐ விட்டு விட்டால் அந்த விண்டோ ஸ்க்ரீன் முன் வந்து விடும். இது விண்டோஸின் பழைய டெக்னிக் தான். விண்டோஸ் படம் போட்ட கீயையும் Tab ஐயும் அழுத்தினாலும் இதைப் போன்றே வேண்டியதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
  1. 8 இல் அட்மின் பயனாளராக இருப்பவருக்கே அனைத்து சலுகைகளும் உண்டு, இணையத்தில் உலாவ, புதிய மென்பொருளை நிறுவ இன்னபிற. சாதாரண பயனாளர் ஏற்கனவே இருப்பனவற்றை பயன்படுத்தலாம். இணையத்தில் உலாவ வேண்டுமானால் உங்கள் கணினி "எப்போதும் கனெக்ட்" ஆகி இருக்கும் இணைப்பை வேண்டுமானால் இவர்கள் பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் தங்கள் ப்ரொஃபைல் படத்தை சூரியகாந்தி பூவிலிருந்து சாமுராய் ஆக்கிக் கொள்ளலாம், கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவே.
கொசுறு: யுனிக்ஸ், மேக் ஆர்வலர்கள் "உலகத்திலேயே ஸ்டார்ட் ன்னு பட்டன் வைச்சு அதை க்ளிக் பண்ணிய உடனே ஷட் டவுன் என்ற பட்டனை வைப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரால் தான் முடியும்" என்று கேலி செய்ததாலோ என்னவோ ஷட் டவுனை விஸ்டாவிலிருந்து ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.


இது ஒரு தொடக்கமே. விண்டோஸ் 8 இல் நிறைய இருக்கிறது தெரிந்து கொள்ள.எனவே தொடர்ந்து எதிர்பாருங்கள்.

வாய்ப்பளித்தமைக்கு பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி.

என்னைப் பற்றி:
ஞானபூமி - உங்கள் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கின்றன.

2 comments

நல்ல தகவல்கள் நண்பரே!

Reply

பகிர்வுக்கு நன்றிங்க...

Reply

Post a Comment